விஜய்யுடன் மீண்டும் முருகதாஸ்… வெற்றி மாறன் தொடங்கி சுதா கொங்கரா வரை

Tags: , , , ,

விஜய்யின் `மாஸ்டர்’ பட வேலைகள் ஆரம்பித்த நாளிலிருந்தே விஜய்யின் 65-வது பட இயக்குநருக்கான தேடல் ஆரம்பித்துவிட்டது. கிட்டத்தட்ட நான்கு மாதங்களாக நடந்த இந்தத் தேடுதல் வேட்டையில், தான் இதுவரை படம் பண்ணாத இயக்குநர்கள் பலரிடமும் கதை கேட்டு, கடைசியில் ஏற்கெனவே தன்னை மூன்று முறை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸுடனேயே படம் பண்ணும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் விஜய்.

2018 தீபாவளிக்கு (நவம்பர் மாதம்) விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான படம் `சர்கார்.’ இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப்பெறவில்லை என்பதோடு தேவையில்லாத சர்ச்சைகளையும் கிளப்பியது.

இதனால் `சர்கார்’ வெளியான சில வாரங்களிலேயே மீண்டும் தங்கள் தயாரிப்பில் நடிப்பேன் என்று சன் பிக்சர்ஸிடம் ஒப்புக்கொண்டிருந்தார் விஜய். கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் `பிகில்’ முடிந்ததும் அடுத்து உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் `மாஸ்டர்’ படத்துக்கு கால்ஷீட் கொடுத்தார். இந்நிலையில் `மாஸ்டர்’ படத்துக்கான வேலைகள் தொடங்கியபோதே சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் 65 படத்துக்கான இயக்குநர் தேடலும் தொடங்கியது.

`மாஸ்டர்’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு முன்பாகவே மகிழ்திருமேனியிடம் கதை கேட்டு படத்தில் நடிக்க ஓகே சொல்லியிருந்தார் விஜய். ஆனால், மகிழ்திருமேனியின் `தடம்’ படத்துக்கு முன்பாகவே அவர் உதயநிதியை இயக்க கமிட்டானதால் அவரால் உடனே விஜய்யின் படத்தை இயக்க முடியவில்லை. இன்னமும் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்துக்கான ஷூட்டிங்கே தொடங்காததால் விஜய் ஆபீஸில் இருந்த மகிழ் திருமேனி ஃபைல் க்ளோஸ் செய்யப்பட்டது.

அடுத்தாக கடந்த டிசம்பரில் இயக்குநர் வெற்றி மாறனிடம் கதை கேட்டார் விஜய். வெற்றி மாறன் சொன்ன ஒன்லைனே விஜய்க்கு மிகவும் பிடித்துவிட, அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடந்தது. “ஆர்.எஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்துக்காக சூரி நடிப்பில் ஒரு படம், அடுத்து கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்கும் படம் என 2020 செப்டம்பர் வரை நான் பிஸி” எனக் கைகுலுக்கிவிட்டு, கொண்டுபோன ஃபைலை கையோடு வீட்டுக்கு எடுத்துவந்துவிட்டார் வெற்றி மாறன்.

இச்சூழலில்தான் `பிகில்’, `மாஸ்டர்’ எனத் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களிலேயே நடிக்கிறோமே, `நண்பர்’ அஜித்தின் `விஸ்வாசம்’ போன்று கிராமத்து சப்ஜெக்ட்டில் நடிக்கலாமே என்கிற எண்ணம் விஜய்க்கு எழுந்திருக்கிறது.

`சிறுத்தை’ சிவா தற்போது ரஜினி படத்தை இயக்கிக்கொண்டிருப்பதால் அவரைப் போன்றே கிராமத்து கதைகளில் எக்ஸ்பெர்ட்டான பாண்டிராஜிடம் கதை கேட்டிருக்கிறார்கள். `கடைக்குட்டி சிங்கம்’, `நம்ம வீட்டுப் பிள்ளை’ எனப் பக்கா கமர்ஷியல் கிராமத்துப் படங்களை இயக்கி ஹிட் அடித்திருக்கும் பாண்டிராஜ் விஜய்யிடம் கதை சொல்ல, அவரும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், தயாரிப்பு நிறுவனமோ பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாகப் படம் பண்ண வேண்டும் என்று சொல்ல, பாண்டிராஜ் பெயர் லிஸ்ட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இச்சூழலில் ஷாருக்கான் படம் தள்ளிக்கொண்டே போவதால் அட்லியின் ஃபைலை மீண்டும் தேடி எடுத்திருக்கிறது விஜய் தரப்பு. ஆனால், ஷாருக்கான் படம் கன்ஃபார்ம் எனத்தகவல் வந்ததால் அட்லியின் ஃபைலை உடனடியாக மூடியிருக்கிறர்கள்.

அடுத்துதான் விஜய் டீமின் ஸ்கேனருக்குள் வந்திருக்கிறார் சுதா கொங்கரா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுதா, மாதவன், ரித்திகா சிங் நடித்த `இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இந்தப்படத்துக்கு அடுத்தபடியாக சூர்யா இயக்கத்தில் `சூரரைப் போற்று’ படத்தை இயக்கி முடித்துவிட்டு, தற்போது நெட்ஃபிளிஸுக்காக ஒரு ஆந்தாலஜி படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் நடந்துவருகிறது. இந்நிலையில்தான் சுதா கொங்கராவிடம் கதை கேட்டிருக்கிறார் விஜய். கதை விஜய்க்குப் பிடித்துப்போக, ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் `சூரரைப் போற்று’ படத்தையும் ஸ்பெஷலாகப் பார்த்து, சுதாவுக்கு ஓகே சொல்லிவிட்டார் விஜய். சன் பிக்சர்ஸும் ஸ்மைலி போட்டுவிட, அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பமாகின. ஹீரோயின் ராஷ்மிகா மந்தனா என ஃபிக்ஸ் செய்யப்பட்டது.

இச்சூழலில்தான் முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார் சுதா கொங்கரா. “இந்தக் கதையின் ஃபைனல் ஸ்கிரிப்ட் வேலைகளை முடிக்க எனக்கு நான்கு மாதங்கள் தேவை. ஆகஸ்ட்டில்தான் ஷூட்டிங் தொடங்க முடியும்” எனச் சொல்ல ஷாக் ஆகியிருக்கிறது விஜய் தரப்பு. “கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஷூட்டிங் போகாமல் இருக்க முடியாது” என விஜய் சொல்ல, அந்த நேரத்தில்தான் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

`தர்பார்’ படம் மிகப்பெரிய தோல்வியடைந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முருகதாஸ் உடனடியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும், மீண்டும் ஒரு நல்ல படம் எடுத்து இமேஜ் டேமேஜை சரி செய்ய வேண்டும் என நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார். `கத்தி’ படத்துக்கு அடுத்து முருகதாஸ் இயக்கிய `அகிரா’, `ஸ்பைடர்’, `சர்கார்’, `தர்பார்’ என நான்கு படங்களுமே தோல்விப் படங்கள். இச்சூழலில் யாரிடம் கால்ஷீட் கேட்கலாம், யாருக்குக் கதை சொல்லலாம் என துடித்துக்கொண்டிருந்த முருகதாஸுக்கு, விஜய் இயக்குநர் கிடைக்காமல் தவிக்கும் தகவல் கிடைக்கிறது.

உடனடியாகத் தன் நட்பு வட்டாரங்கள் மூலம் விஜய்யை அணுகுகிறார் முருகதாஸ். `சர்கார்’ ஃப்ளாப் கொடுத்ததோடு, தொடர்ந்து தோல்விப்படங்கள் கொடுத்தவரோடு இணைய வேண்டாம் என நெருக்கமானவர்கள் சிலர் விஜய்யிடம் சொல்லியிருந்தாலும் முருகதாஸை நேரில் அழைத்து கதை கேட்டு டிக் அடித்திருக்கிறார் விஜய். அடுத்த படம் `துப்பாக்கி’ போல இருக்கும் என விஜய்யிடம் உறுதியளித்திருக்கிறார் முருகதாஸ். முதலில் இக்கூட்டணி இணைவதில் தயக்கம்காட்டிய தயாரிப்பு தரப்பும் விஜய்யின் சூழலைப் புரிந்துகொண்டு ஓகே சொல்லியிருக்கிறது.

கொரோனா பீதி முடிந்ததும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இப்போதைக்கு விஜய்க்கு மாஸ் ஹிட் அடிக்கும் திரைக்கதை எழுதுவதில் பிஸியாகிவிட்டார் முருகதாஸ். உலகமே வீட்டுக்குள் முடங்கியிருப்பதால் அவருக்கும் பல உலகப் படங்கள், பல வெப்சீரிஸ்கள் பார்த்தும், பல கதைகள் படித்தும் `இன்ஸ்பையர்’ ஆவதற்கான நேரம் கிடைத்திருக்கிறது.

Source: https://cinema.vikatan.com/tamil-cinema/is-vijay-joining-with-director-ar-murugadoss-again

 30 total views,  1 views today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *